முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

இம்ரான் கானின் மகன்கள் இராணுவத் தளபதிக்கு குற்றச்சாட்டு

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பில் அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தனிப்பட்ட பழிவாங்கலில் ஈடுபடுவதாக அவரது மகன்களான காசிம் கான் மற்றும் சு…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
இம்ரான் கானின் மகன்கள் இராணுவத் தளபதிக்கு குற்றச்சாட்டு

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பில் அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தனிப்பட்ட பழிவாங்கலில் ஈடுபடுவதாக அவரது மகன்களான காசிம் கான் மற்றும் சுலைமான் கான் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது தந்தை சிறையில் கடுமையான நிலைமைகளை எதிர்கொள்வதாகவும், அவரது உடல்நிலை குறித்து தாம் தீவிரமாக கவலைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். ஆறு மாதங்களுக்கும் மேலாக தமது தந்தையுடன் பேசுவதற்கு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் சிறிய அறையொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுயாதீன மருத்துவர்களுடன் தொடர்புகொள்வதற்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவரது மகன்கள் கூறுகின்றனர். அவரது கண் தொடர்பான நோய் மற்றும் ஏனைய உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இம்ரான் கானை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிப்பது, குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்திப்பதற்கு அனுமதிப்பது மற்றும் அவரது மகன்களுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வாய்ப்பு வழங்குவது தொடர்பாக பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்டரீதியான சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இம்ரான் கானை தவறாக நடத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது. அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளும் உறவினர்களுடன் தொலைபேசி தொடர்பும் வழங்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இம்ரான் கான் 1996ஆம் ஆண்டு ஆரம்பித்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி, அவரது விடுதலையை வலியுறுத்தி இந்த மாத இறுதியில் நாடு தழுவிய பேரணியொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்