கடந்த செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, நுகேகொட பகுதியில் நிலவும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வாக பொது வாகன தரிப்பிடத் திட்டமொன்றை தயாரிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
நுகேகொட நகரில் போதுமான வாகன தரிப்பிட வசதிகள் இல்லாமை, பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வரும் வாகனங்கள் வீதியோரங்களில் நிறுத்தப்படுதல் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதால் ஏற்படும் தாக்கம் குறித்து கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நுகேகொட நகர மத்தியில் அமைந்துள்ள லைசியம் சர்வதேச பாடசாலைக்கு தினமும் மாணவர்களை அழைத்து வரும் வாகனங்கள் காரணமாக பிரதான வீதியின் மூன்று பாதைகளை மூட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அதிகாரி ஒருவர், வீதிகள் வாகனப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட வேண்டிய போதிலும், தற்போது அவை பெருமளவில் வாகனங்களை நிறுத்துவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிக நெரிசல் காணப்படும் பகுதிகளில் 10 முதல் 12 மாடிகள் கொண்ட பல்மாடி வாகன தரிப்பிடத் தொகுதிகளை அமைப்பது பொருத்தமானது எனவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக பொது வாகன தரிப்பிடத் திட்டமொன்றை தயாரிக்க முடியுமா எனக் கேட்டறிந்துள்ளார்.
மேலும், நுகேகொடவிலுள்ள குறுகிய குடியிருப்பு வீதிகளில் அதிகளவான மாணவர்கள் மற்றும் வாகனங்கள் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும்போது போதுமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதேபோன்ற வாகன தரிப்பிடப் பிரச்சினைகள் காணப்படுவதாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய வாகன தரிப்பிடத் தொகுதிகளை அமைப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.




