கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளில் ‘கிரேப் பேண்டேஜ்’ உள்ளிட்ட அத்தியாவசிய சத்திரசிகிச்சை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சாமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
காயங்களுக்கு கட்டுப் போடுதல், சத்திரசிகிச்சைகளுக்குப் பின்னர் காயங்களை மூடுதல் மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சைகளுக்குத் தேவையான பேண்டேஜ்கள் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாட்டினால் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் பிரிவில் இடம்பெறும் கொள்வனவு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களே இந்தத் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களை உள்நாட்டில் கொள்வனவு செய்வதற்கு வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் சில வைத்தியசாலைகளில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக சிகிச்சைக்குத் தேவையான பொருட்களை வெளியில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு எவரும் இல்லாத நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் துறையின் கொள்வனவு நடவடிக்கைகளும் தற்போது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விசேட வைத்திய நிபுணர் சாமல் சஞ்சீவ, இந்தத் தாமதங்கள் தொடர்ந்தால் கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போன்ற மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு மீண்டும் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.
கொள்வனவு மற்றும் விநியோக முறைமையில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு தலையீடு செய்யுமாறு அவர் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




