தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை குண்டுத் தாக்குதலில் கொலை செய்து, அவர்களின் தந்தைக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கல்கிசை விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளில், இந்தக் குண்டுத் தாக்குதலை கொஸ்மல்லி என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரின் மாமாவும் அவரது குழுவைச் சேர்ந்த ஒருவரும் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் மறைந்திருந்ததாகக் கருதப்பட்ட பல இடங்களை விசேட பொலிஸ் குழுவினர் சோதனையிட்டுள்ள போதிலும், அதற்குள் அவர்கள் அந்த இடங்களிலிருந்து தப்பிச் சென்றிருந்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொஸ்மல்லி மற்றும் படோவிட்ட அசங்க என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வழிநடத்தும் இரு குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்தக் குண்டுத் தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படோவிட்ட அசங்கவின் குழுவைச் சேர்ந்த ஒருவரை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களின் தவறினால் வேறொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபரின் மூத்த சகோதரர் படோவிட்ட அசங்கவின் ஆதரவாளராக இருப்பதாகவும், அவரை இலக்காகக் கொண்டே தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த நபர் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் இருந்த நிலையில், தவறுதலாக அவரது சகோதரர் வசித்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர், தாக்குதலை மேற்கொள்ளச் சென்றவர்களுக்கு பயணிப்பதற்காக முச்சக்கர வண்டியை வழங்கியவர் எனவும், மற்றைய சந்தேகநபர் அந்த முச்சக்கர வண்டியை தாக்குதலுக்காகப் பயன்படுத்தும் வகையில் பழுதுபார்த்துக் கொடுத்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




