வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற அதே சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நேற்று (14) நண்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் அருகே மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அணிந்திருந்த காலணிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 16.7 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று உடனடியாகச் செயற்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




