போதைப்பொருட்களைப் பயன்படுத்தி மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்கான சோதனைகளை தீவிரப்படுத்த பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர, இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தினசரி இடம்பெறும் மரண மற்றும் பாரதூரமான வீதி விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின்போது, போதைப்பொருட்களைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், ஆபத்தான மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், அத்துடன் அதிக களைப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தியதாக அடையாளம் காணப்பட்ட பல பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட பல நடத்துநர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏதேனும் பேருந்து சாரதி அதிக வேகத்தில், போட்டித்தன்மையுடன், முறையற்ற விதத்தில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தினால், அது தொடர்பான தகவல்களை 070 47 55 600 என்ற WhatsApp இலக்கத்திற்கு வழங்குமாறு பொலிஸ் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
வாகனத்தின் இலக்கத் தகடு தெளிவாகத் தெரியும் வகையில் காணொளியை பதிவு செய்து அனுப்புமாறும் பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித தராதரமும் பாராமல் கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர வலியுறுத்தினார்.




