ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சுமார் 90 கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கி இலங்கைக்கு வந்த உகண்டா பிரஜையொருவர் நேற்று (13) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய உகண்டா நாட்டைச் சேர்ந்த விவசாயி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் உகண்டாவின் என்டெப்பே நகரிலிருந்து கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில், கட்டார் நாட்டின் தோஹா ஊடாக பயணித்துள்ளார். பின்னர் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR-664 என்ற விமானத்தில் நேற்று (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேகநபர் நேற்று பிற்பகல் வரை விமான நிலையத்தின் முதலாவது மாடியில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர் விழுங்கியிருந்த 13 கொக்கெய்ன் உருண்டைகளை விமான நிலையத்திலேயே இயற்கையாக வெளியேற்றியுள்ளார்.
சந்தேகநபர் தனது வயிற்றில் மேலும் மறைத்து விழுங்கியுள்ள கொக்கெய்ன் உருண்டைகளை முழுமையாக உடலிலிருந்து வெளியேற்றுவதற்காக அவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.




