அதிக மழைவீழ்ச்சி காரணமாக கண்டி மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் திடீர் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது நாவலப்பிட்டிய பவ்வாகம வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக நிவாரண நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில மணித்தியாலங்களில் அதிகளவு மழைவீழ்ச்சி களுத்துறை மாவட்டத்தின் வல்லாவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 119 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஹங்வெல்ல, எல்பிட்டிய, நெலுவ, துன்ஹின்ன, வதுரவில்ல மற்றும் நாஉல ஆகிய பகுதிகளிலும் 50 முதல் 119 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் நிலவும் அதிக மழைவீழ்ச்சி ஆகிய இரு நிலைமைகளையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னறிவிப்பு அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஏதேனும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அது தொடர்பில் 117 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், எல் நினோ காலநிலை நிலைமையின் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு அருகிலுள்ள கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக மேல், மத்திய, சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




