முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

யால தேசிய பூங்காவின் 2 வலயங்கள் மூடல்

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 01 மற்றும் 02ஆம் வலயங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் த…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
யால தேசிய பூங்காவின் 2 வலயங்கள் மூடல்

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 01 மற்றும் 02ஆம் வலயங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இன்று முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு இந்தத் தீர்மானம் நடைமுறையில் இருக்கும்.

பல்வேறு வகைகளைச் சேர்ந்த 44 பாலூட்டி இனங்கள், 215 பறவை இனங்கள், 47 ஊர்வன இனங்கள் மற்றும் 21 மீன் இனங்களின் வாழ்விடமாக யால தேசிய பூங்கா காணப்படுகிறது. பொதுவாக ஆகஸ்ட் முதல் மார்ச் வரையான காலப்பகுதியே பூங்காவிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காலமாகும்.

எனினும், இந்த வருடம் குறித்த சுற்றுலாப் பருவத்தில் எல் நினோ காலநிலை நிலைமை கடுமையாக தாக்கம் செலுத்தியுள்ளதால், பூங்காவிலுள்ள பல நீர் நிலைகள் வறண்டுள்ளன.

அதிக வெப்பநிலை காரணமாக பூங்காவில் வாழும் விலங்குகள் கடுமையான குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்வதுடன், தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து வருவதால் உணவுப் பற்றாக்குறையையும் எதிர்கொள்வதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், விலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, மாணிக் கங்கையின் நான்கு இடங்களில் இருந்து சூரிய மின்கல மோட்டார் உதவியுடன் பெறப்படும் நீர், நிலத்தடி குழாய்கள் மூலம் தேசிய பூங்காவிலுள்ள குளங்களுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும், நாளாந்தம் சுமார் இரண்டு இலட்சம் லீற்றர் நீரை பவுசர்கள் மூலம் கொண்டு சென்று செயற்கை மற்றும் இயற்கை குளங்களை நிரப்புவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வறட்சியான காலநிலையில் உணவு மற்றும் நீரைத் தேடி விலங்குகள் இடம்பெயரும்போது சுற்றுலா வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை குறைத்து, விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வாய்ப்பளிப்பதே பூங்காவின் இரு வலயங்களையும் தற்காலிகமாக மூடுவதன் பிரதான நோக்கமாகும்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்