1950ஆம் ஆண்டு முதல் இதுவரை பதிவாகியுள்ள 28 எல் நினோ நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை ஏற்படக்கூடிய எல் நினோ நிலைமை அவை அனைத்தையும் விஞ்சும் அளவுக்கு வலுவாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான்ன, எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான முன்னறிவிப்பு சாத்தியம் முன்னர் 69 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 75 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, கடந்த 75 ஆண்டுகளில் பதிவான அனைத்து எல் நினோ நிலைமைகளையும் விட இம்முறை அதிக தாக்கம் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்படும் இந்த சுற்றுச்சூழல் நிகழ்வு காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பதிவாகும் மழைவீழ்ச்சி வழக்கமான அளவை விட கணிசமாக அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மழைவீழ்ச்சியில் ஓரளவு குறைவு ஏற்படக்கூடும் என்றாலும், செப்டெம்பர் மாத இறுதியிலிருந்து நாடு முழுவதும் மழை நிலைமை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் இந்த நிலைமை ‘வலுவான எல் நினோ’ நிலையாக மாறுவதற்கான சாத்தியம் 98 சதவீதம் வரை அதிகமாக உள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எனினும், இந்த அதிக மழைவீழ்ச்சி காலத்துக்குப் பின்னர், அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறைவதால் கடுமையான நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எல் நினோ நிலைமை என்பது நேரடியாக வறட்சியான காலநிலை அல்லது வறட்சி நிலையை மட்டுமே குறிக்காது எனவும், அது இலங்கையின் வழக்கமான பருவமழை காலநிலை முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வு எனவும் அஜித் விஜயமான்ன வலியுறுத்தினார்.
அத்துடன், உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் நாட்டில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் வெப்பநிலை உயர்ந்த மட்டத்தில் காணப்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார். மழை பெய்தாலும் நிலவும் வெப்பம் அல்லது வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




