கொங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள புகாவு நகரில் இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் 24 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தீயிலிருந்து தப்பிக்க முயன்றபோது மாணவர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் பல பெரியவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தீ விபத்தினால் சுமார் 300 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் Reuters செய்திச் சேவையிடம் கூறுகையில், பிற்பகல் வேளையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அழிவடைந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
தென் கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவு, கொங்கோ குடியரசின் அதிக மக்கள் தொகை கொண்ட மலைப்பாங்கான நகரங்களில் ஒன்றாகும். M23 கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நகரை கைப்பற்றியிருந்தனர்.




