இலங்கையின் பாடசாலை கல்வித் துறையில் இதுவரை நடைமுறையில் இருந்த மதிப்பீடு மற்றும் பரீட்சை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்காலத்தில் மாணவர் ஒருவரின் இறுதி மதிப்பெண்களில் 50% வருடம் முழுவதும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான மதிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன், மீதமுள்ள 50% தவணைப் பரீட்சைகள் மூலம் தீர்மானிக்கப்படவுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த GPA (Grade Point Average) முறைக்குப் பதிலாக, பாடங்களின் தன்மைக்கு ஏற்ப இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும் ‘நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண்’ முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பொதுக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, 2026 கருத்தாக்க ஆவணம் மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கல் கட்டமைப்பு ஆகியவை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மறுசீரமைப்புகள் தற்போது தரம் 1 இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தரம் 2 மற்றும் தரம் 6 ஆகியவற்றில் 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.




