சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
2020.05.14 அன்று பேலியகொட பொலிஸ் நிலையத்தினால் ஜீப் வாகனத்தில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச் சென்ற 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினாலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணைகளின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பேலியகொட பகுதியில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பின்வரும் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மஹர, கடவத்த பகுதியில் அமைந்துள்ள 19.90 பேர்ச்சஸ் காணியும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வீடும் – சுமார் 500 இலட்சம் ரூபாய் பெறுமதி.
சிங்காரமுல்ல, களனி பகுதியில் அமைந்துள்ள 18 பேர்ச்சஸ் காணியும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வீடும் – சுமார் 500 இலட்சம் ரூபாய் பெறுமதி.
விசாரணைகளின்படி, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் இந்தச் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதன்படி, 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குறித்த சொத்துக்களை பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2026.09.10 முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.





