கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பலை இலக்காகக் கொண்டு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) அறிவித்துள்ளது.
குறித்த அமெரிக்க போர்க்கப்பல் இரண்டு தாக்குதல் முயற்சிகளையும் வெற்றிகரமாகத் தவிர்த்து, பிராந்திய கடற்பரப்பில் தனது ரோந்து நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டதாக CENTCOM தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்களில் எந்தவொரு அமெரிக்க இராணுவ வீரரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஓமன் வளைகுடாவில் இருந்த ‘M/T Kaviz’, ‘M/T Charminar’, ‘M/T Horizon 1’ மற்றும் ‘M/T Riesco’ ஆகிய நான்கு கச்சா எண்ணெய் கப்பல்களும், ஈரானின் Kharg தீவுக்கு அருகில் இருந்த ‘M/T Derya’ என்ற கப்பலும் அமெரிக்க இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை செயலிழக்கச் செய்வதற்கு முன்னர், அவற்றின் பணியாளர்களுக்கு கப்பல்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக CENTCOM தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு நிதியளிக்கும் பில்லியன் கணக்கான டொலர் வலையமைப்பின் ஒரு பகுதியாக ஈரான் இந்த எண்ணெய் கப்பல்களைப் பயன்படுத்துவதாக அமெரிக்க இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்தானின் அல்-அஸ்ராக் பகுதிக்கு அருகிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஜோர்தான் இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு 18 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழித்துள்ளது. மேலும் இரண்டு ஏவுகணைகள் மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் ஒன்றுக்கு எதிராக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மேற்கொண்ட பல்வேறு தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் மேலும் மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை அழித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த புதிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன.




