முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
தொழில்நுட்பம்

தனியார் துறைக்கும் ரயில் சீசன் டிக்கெட் ஆன்லைனில்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆசன முன்பதிவு இணையத்தளத்தின் ஊடாக தனியார் துறை ஊழியர்களுக்கும் மாதாந்த ரயில் பருவச்சீட்டுகளை (Season Tickets) பெற்றுக்கொள்ளும் வசதி எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
தனியார் துறைக்கும் ரயில் சீசன் டிக்கெட் ஆன்லைனில்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆசன முன்பதிவு இணையத்தளத்தின் ஊடாக தனியார் துறை ஊழியர்களுக்கும் மாதாந்த ரயில் பருவச்சீட்டுகளை (Season Tickets) பெற்றுக்கொள்ளும் வசதி எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்கு முன்னர் அரச துறை ஊழியர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த வசதி விரிவுபடுத்தப்படுவதன் மூலம், ரயில் சேவையைப் பயன்படுத்தும் தனியார் துறை ஊழியர்கள் அடிக்கடி ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. அவர்கள் இணையத்தளத்தின் ஊடாகவே பருவச்சீட்டுகளுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த புதிய வசதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில், டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவின் பங்கேற்புடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் நெலும் மண்டபத்தில் நடைபெற்றது.

தற்போதுள்ள நடைமுறையின் கீழ் மாதாந்த பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதில் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். விண்ணப்பப் படிவம், புகைப்படம், வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஆகியவற்றை சமர்ப்பித்து முதலில் ரயில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

மேலும், 10 நாட்கள் கொண்ட காலப்பகுதியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையான குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரமே இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனினும், புதிய டிஜிட்டல் முறையின் கீழ் பயணிகளின் அடையாளத்தையும் பயனர் கணக்கையும் உறுதிப்படுத்திய பின்னர், வீட்டிலிருந்தே பருவச்சீட்டுகளுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.

ஆசன முன்பதிவு வசதி கொண்ட எந்தவொரு ரயில் நிலையத்திலும் பயணிகள் தமது பயனர் கணக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் SLT-Mobitel நிறுவனம் ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

அரச சேவையாளர்களுக்கான சலுகை ரயில் பருவச்சீட்டுகளை இணையத்தளத்தின் ஊடாக வழங்கும் நடவடிக்கை அரசாங்க நிறுவன விதிமுறைகளின் XVII ஆம் அத்தியாயத்திற்கு அமைவாக 2026 ஜூன் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ரயில் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி பயணிகளுக்கு மிகவும் திறமையானதும் வசதியானதுமான சேவையை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்றமாக தனியார் துறைக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ரயில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் களனி பள்ளத்தாக்கு ரயில் பாதையில் பயணிக்கும் பயணிகளுக்காக ஸ்மார்ட் பயணச்சீட்டு முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைமை தற்போது முன்மாதிரி திட்டமாக பேஸ்லைன் வீதி, கோட்டா வீதி, கிருலப்பனை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்