முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
தொழில்நுட்பம்

டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டைகள் குறித்து பொலிஸார் அறிவிப்பு

இலங்கை முழுவதும் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கை காப்புறுதி ஒழுங்குபடு…

By Site Administrator3 நிமிட வாசிப்பு
டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டைகள் குறித்து பொலிஸார் அறிவிப்பு

இலங்கை முழுவதும் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் துறையுடன் தொடர்புடைய தரப்பினரின் கூட்டு தீர்மானத்திற்கு அமைய, பாரம்பரியமான பௌதிக காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை காப்புறுதி நிறுவனங்கள் 2026 மே 1 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன.

மேலும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ், 1999 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையும் தனது அதிகாரப் பிரதேசத்திற்குட்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு 2026 ஜூலை 20 ஆம் திகதி முதல் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நடைமுறை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய முறையின் கீழ், பொதுவான காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் காப்புறுதிக் காப்பீட்டை டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டையாக கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) மூலம் பெற்றுக்கொள்ள முடியும். காப்புறுதிப் பாலிசிதாரரின் கோரிக்கையின் பேரில் அச்சிடப்பட்ட சான்றிதழையும் பெற்றுக்கொள்ள முடியும்.

விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் வழங்கப்படும் காப்புறுதிகளுக்கு, காப்புறுதிப் பாலிசிதாரர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் QR குறியீடு மற்றும் URL ஊடாக டிஜிட்டல் அட்டையை அணுக முடியும். அத்துடன், அச்சிடப்பட்ட சான்றிதழ் அல்லது டிஜிட்டல் அட்டையையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் 104(1) பிரிவின் கீழ், தமது காப்புறுதிச் சான்றிதழை சமர்ப்பிப்பது சாரதிகளின் சட்டபூர்வ கடமையாகும்.

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைகள் சட்டத்தின் II ஆம் அத்தியாயத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளின் சட்டபூர்வ அங்கீகாரம், செல்லுபடியாகும் தன்மை மற்றும் சட்டப்பூர்வ விளைவை மறுக்க முடியாது.

காப்புறுதி காப்பீட்டின் செல்லுபடியை உடனடியாக உறுதிப்படுத்துவதற்காக தேசிய காப்புறுதி உறுதிப்படுத்தல் முறைமை மற்றும் விவசாயக் காப்புறுதி பாலிசி உறுதிப்படுத்தல் முறைமை ஆகியவை செயற்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் காப்புறுதிப் பாலிசிதாரர்கள் பொதுவான காப்புறுதி நிறுவனங்களுக்காக 1338 என்ற குறுகிய இலக்கத்தையும், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைக்காக 1918 என்ற குறுகிய இலக்கத்தையும் பயன்படுத்தி USSD சேவை மூலம் காப்புறுதி பாலிசியின் செல்லுபடியை உறுதிப்படுத்த முடியும்.

இதற்காக வாகன இலக்கம் அல்லது காப்புறுதி பாலிசி இலக்கத்தை உள்ளிட முடியும். மேலும், தகவல்களை SMS மூலம் அனுப்பியும் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதற்கும் 1338 அல்லது 1918 என்ற இலக்கங்களை அழைக்க முடியும்.

விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் காப்புறுதி பாலிசிகளை உறுதிப்படுத்துவதற்காக QR குறியீட்டை நேரடியாக ஸ்கேன் செய்வது அல்லது SMS/Email மூலம் பெறப்படும் URL ஊடாக நேரடி தரவு முறைமையைப் பார்வையிடுவதும் சாத்தியமாகும்.

1338 USSD மற்றும் SMS சேவைகளைப் பயன்படுத்தும்போது, வாகன இலக்கங்கள் ஆங்கில எழுத்துக்கள் அல்லது எண்கள் மற்றும் ஹைபன் (-) ஆகியவற்றைப் பயன்படுத்தி, இடைவெளியின்றி உள்ளிடப்பட வேண்டும். “ශ්‍රී” என்பதற்குப் பதிலாக “SRI” பயன்படுத்தப்பட வேண்டும். 1918 சேவைக்கு வாகன இலக்கங்களை உள்ளிடும்போது மாகாண எழுத்துக்களையும் இடைவெளிகளையும் நீக்கி, “ශ්‍රී” என்பதற்குப் பதிலாக ஹைபன் (-) பயன்படுத்த வேண்டும்.

1338 மற்றும் 1918 குறுகிய இலக்கங்களுக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து அழைப்புகள் மற்றும் SMS செய்திகள் முற்றிலும் இலவசம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2026 மே 1 மற்றும் ஜூலை 20 ஆம் திகதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பௌதிக காப்புறுதிச் சான்றிதழ்கள், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி திகதி வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காப்புறுதி நிறுவனங்களால் அதிகாரபூர்வமாக நிறுத்தப்படும் வரை தற்காலிக காப்புறுதி உறுதிப்பத்திரங்கள் (Temporary Cover Notes) தொடர்ந்து வழங்கப்படும்.

விபத்து தொடர்பான விசாரணையின்போது தேவைப்பட்டால், காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அச்சுப் பிரதியை கோரலாம். செயலி மூலம் நேரடியாக அச்சிடலாம் அல்லது காப்புறுதி பாலிசியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் டிஜிட்டல் காப்புறுதி அட்டையை காண்பிக்க முடியாத சந்தர்ப்பங்களில், வழங்கப்பட்டுள்ள USSD அல்லது SMS சேவைகளைப் பயன்படுத்தி வாகனத்தின் காப்புறுதிக் காப்பீட்டை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்