நியூயோர்க் நகர பொதுப் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) பயன்படுத்துவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குழந்தைகளின் தனித்திறமைகள், சுயமாக சிந்திக்கும் திறன் மற்றும் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையின் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.
எனினும், ஒன்பதாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட சில தேவைகளுக்காக மட்டும் ஏ.ஐ. செயலிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆசிரியர்கள் பாடங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்சார் தேவைகளுக்காக ஏ.ஐ. செயலிகளைப் பயன்படுத்தும் விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வகுப்பறைகளில் திரையைப் பயன்படுத்தும் நேரத்தை 45 நிமிடங்களாகவும், ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு 30 நிமிடங்களாகவும் மட்டுப்படுத்துமாறு நியூயோர்க் கல்வித் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குழந்தைகள் கற்றுக்கொள்ளவும் வளர்ச்சியடையவும் ஆசிரியர்களுடனான நேரடி தொடர்பு அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சக மாணவர்களுடன் இணைந்து திறன்களை வளர்த்துக்கொள்வதுடன், ஆசிரியர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், கடினமான சிக்கல்களைத் தாங்களே எதிர்கொண்டு தீர்க்கவும் குழந்தைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பக் கல்வி தவிர்க்க முடியாததும் அவசியமானதுமாக இருப்பதாக தொழில்நுட்பத் துறை கருதினாலும், அதனை தமது நிர்வாகம் அவ்வாறு பார்க்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




