ஹம்பாந்தோட்டை முன்னாள் நகராதிபதி எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையைத் தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரியினால் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் பின்னர், மேலதிக விசாரணைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக உடலிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
61 வயதான முன்னாள் நகராதிபதி, திம்பிரிகஸ்யாய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியொன்றின் எட்டாவது மாடியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் கடந்த 02ஆம் திகதி காலை கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அந்த வீட்டில் அறையொன்றுக்கு அருகிலிருந்த கதவில் கழுத்தில் கட்டப்பட்டிருந்த டை ஒன்றின் மூலம் அவர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டில் மற்றொருவரும் வசித்து வந்த நிலையில், அவர் அதற்கு முந்தைய நாள் ஹம்பாந்தோட்டை பகுதிக்குச் சென்றிருந்தார். மறுநாள் காலை எராஜ் பெர்னாண்டோவை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது தோல்வியடைந்ததால், வீட்டை சுத்தம் செய்யும் பெண்ணிடம் வீட்டைச் சென்று பார்வையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்தப் பெண் எராஜ் பெர்னாண்டோவின் சடலத்தைக் கண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




