உலகின் 21 நாடுகளில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள், அதாவது ஐந்து குழந்தைகளில் ஒருவர், ஒரு வருட காலப்பகுதிக்குள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாலியல் துஷ்பிரயோகம் அல்லது சுரண்டலுக்கு உள்ளாகியுள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Through Children’s Eyes’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, 15 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தேவையற்ற பாலியல் உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும், 9 மில்லியன் குழந்தைகள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் உரையாடல்களில் ஈடுபட அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், சுமார் 4 மில்லியன் குழந்தைகளின் அனுமதியின்றி அவர்களது தனிப்பட்ட பாலியல் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களை குழந்தைகள் தெரிவிக்கத் தயங்குவதால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டொக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்றுள்ளதுடன், 14 சதவீதம் இணையவழி விளையாட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
சம்பவங்களில் 57 சதவீதமானவற்றில், குழந்தை ஏற்கனவே நன்கு அறிந்த அதே வயதுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புபட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த அனுபவங்கள் குழந்தைகளின் மனநலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குழந்தைகள் தற்கொலை எண்ணங்கள் அல்லது சுய-தீங்கு விளைவிக்கும் நடத்தைகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு சாதாரண குழந்தைகளை விட நான்கு மடங்கு அதிகம் என பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.
எனினும், 40 சதவீதத்திற்கும் அதிகமான துஷ்பிரயோக சம்பவங்கள் எவரிடமும் பகிரப்படவில்லை. அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டவை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, டிஜிட்டல் தளங்களை மேலும் பாதுகாப்பானதாக வடிவமைத்தல், சட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்தல் மற்றும் குழந்தைகள் நம்பக்கூடிய உதவி அமைப்புகளை உருவாக்குதல் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என யுனிசெப் வலியுறுத்தியுள்ளது.




