ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய ‘சைபோர்க்’ கரப்பான்பூச்சிகளை உருவாக்கியுள்ளனர்.
‘பாராபோர்க்ஸ்’ என அழைக்கப்படும் இந்த கரப்பான்பூச்சிகள், இடிபாடுகள் மற்றும் குறுகிய இடங்களுக்குள் நுழைந்து சிக்கியுள்ளவர்களைத் தேடுவதற்கும், அவசர மருந்துகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு குயின்ஸ்லாந்தில் காணப்படும் நிலத்தைத் தோண்டி வாழும் பிரமாண்ட கரப்பான்பூச்சிகள் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 8.5 சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய இவை, உலகின் அதிக எடை கொண்ட கரப்பான்பூச்சி இனங்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு கரப்பான்பூச்சியின் மீதும் சிறிய முதுகுப்பை போன்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் கேமரா அல்லது மருந்தைச் செலுத்துவதற்கான ஊசி போன்ற கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அதன் உடலில் பொருத்தப்பட்டுள்ள சிறிய மின்முனைகள் மூலம் நரம்பியல் மண்டலத்திற்கு மின் சமிக்ஞைகளை அனுப்பி, தொலைதூரத்தில் இருந்தே அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளியை அணுகிய பின்னர் கரப்பான்பூச்சியுடன் இணைக்கப்பட்ட ஊசி மூலம் மருந்தைச் செலுத்த முடியும்.
ஆய்வில் பங்கேற்ற பயோரோபாடிக்ஸ் பொறியாளர் தாங் வோ-டோவன் கூறுகையில், பூச்சிகளுக்கு முதலில் மயக்க மருந்து வழங்கப்பட்டு, செயல்முறையின் போது அவை எதையும் உணராத வகையில் அவற்றின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
கரப்பான்பூச்சிகள் குறுகிய இடங்களுக்குள் நுழையவும், கடினமான நிலப்பரப்புகளில் நகரவும், கடுமையான சூழல்களில் உயிர்வாழவும் கூடியவை என்பதால் இந்த ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், வழக்கமான ரோபோக்களுடன் ஒப்பிடுகையில் இவற்றுக்கு மிகக் குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது.
மனிதர்களிடம் ஊசி செலுத்தும் முறை இதுவரை பரிசோதிக்கப்படவில்லை. இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகச் சூழலில் சிலிக்கான் இலக்குகள் மற்றும் பன்றித் தோல் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வகப் பரிசோதனைகளில், ஒரு ‘அப்சர்வர்’ கரப்பான்பூச்சி கேமராவைப் பயன்படுத்தி இலக்கை கண்டறிந்தது. மற்றொரு கரப்பான்பூச்சி, தொலைதூரத்திலிருந்து வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் ஊசி உபகரணத்தைப் பயன்படுத்தி மருந்தைச் செலுத்தியது.
ஒட்டுமொத்தமாக மருந்தைச் செலுத்தும் முயற்சிகளில் 72 சதவீதம் வெற்றிகரமாக முடிந்தன. இலக்கிலிருந்து 15 சென்டிமீட்டர் தொலைவில் இருந்து ஊசி செலுத்தப்பட்டபோது வெற்றி விகிதம் 95 சதவீதமாக உயர்ந்தது.
எதிர்காலத்தில் இடிந்து விழுந்த கட்டடங்கள் அல்லது குகைகளில் சிக்கியுள்ளவர்களை சென்றடைய இந்த ‘பாராபோர்க்’ கரப்பான்பூச்சிகளைப் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் அல்லது பாம்புக்கடிகள் போன்ற அவசர நிலைகளுக்கான மருந்துகளை, மனித மீட்புக் குழுக்கள் சென்றடைவதற்கு முன்பாகவே இவை பாதிக்கப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கக்கூடும்.
எனினும், சமிக்ஞைகள் தடைபடுதல், ஆபத்தான நிலப்பரப்புகள் மற்றும் ஊசியை பாதுகாப்பாகச் செலுத்துவதை உறுதி செய்தல் உள்ளிட்ட சவால்களுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.
இறுதியில், பேரிடர் பகுதிகளுக்கு ‘பாராபோர்க்’ கரப்பான்பூச்சிகளின் கூட்டங்களை அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அவற்றில் சில உயிர் பிழைத்தவர்களைத் தேடவும், மற்றவை அவசர மருந்துகளை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட உள்ளன.
மூலம்: BBCக்காக Collective Newsroom வெளியீடு
படங்கள்: The University of Queensland & Reuters





