மறைந்த பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேராவின் இறுதிக் கிரியைகள் நாளை (03) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது பூதவுடல் இன்று நண்பகல் முதல் கொழும்பில் உள்ள தனியார் மலர்ச்சாலையொன்றில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரியங்கர பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானார். அவர் காலமானபோது 64 வயதாக இருந்தார்.
மறைந்த பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மூத்த மகனான பிரியங்கர பெரேரா, பாடகர் சலக சனுபதியின் சகோதரரும் ஆவார்.
இலங்கையின் இசைத்துறையில், குறிப்பாக கசட் காலகட்டத்திலும் 1980 மற்றும் 1990களிலும் மிகவும் பிரபலமான பாடகராக பிரியங்கர பெரேரா திகழ்ந்தார்.
தந்தையிடமிருந்து பெற்ற இசை மரபைத் தொடர்ந்து, தனது இனிமையான குரலால் பல பாடல்களை இசை ரசிகர்களுக்கு வழங்கிய அவர், ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்தார்.




