முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

நேபாள வெள்ளம்: சுரங்கங்களில் சிக்கியோரை தேடும் பணி தீவிரம்

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்குப் பின்னர், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளில் சிக்கியிருப்பதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கானவர்களை மீட்பதற்காக நேபாள மீட்புக் குழுக்கள் சீனா மற்…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
நேபாள வெள்ளம்: சுரங்கங்களில் சிக்கியோரை தேடும் பணி தீவிரம்

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்குப் பின்னர், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளில் சிக்கியிருப்பதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கானவர்களை மீட்பதற்காக நேபாள மீட்புக் குழுக்கள் சீனா மற்றும் இந்திய நிபுணர்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

பாறைகள், சேறு மற்றும் மண்சரிவு பகுதிகளை அடித்துக் கொண்டு வந்த இந்த எதிர்பாராத வெள்ளம் கடந்த புதன்கிழமை நேபாளத்தின் கிராமங்கள் மற்றும் நகரங்களிலும், சீன எல்லைப் பகுதிகளிலும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேரழிவுக்கு பனிப்பாறை சரிவு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மலைப்பகுதிகளில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் நேபாளத்தின் சமவெளிப் பகுதிகளில் நிலவும் அதிக ஈரப்பதமான காலநிலை காரணமாக அழுகத் தொடங்கியுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத நூற்றுக்கணக்கான சடலங்களை ஆழமற்ற குழிகளில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 நீர்மின் திட்டங்களில் சிக்கியிருப்பதாக நம்பப்படும் 933 தொழிலாளர்களை சென்றடைவதே மீட்பு நடவடிக்கைகளின் முக்கிய இலக்காக உள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுமார் எட்டு சுரங்கப் பாதைகளில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புக் குழுக்கள் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், இரவு நேரங்களில் மின்விளக்குகளின் உதவியுடன் அகழ்வுப் பணியந்திரங்களைப் பயன்படுத்தி சேறு மற்றும் பாறைகளை அகற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

சுரங்கங்களில் தேங்கியுள்ள நீர் மற்றும் சேற்றை அகற்றி, சிக்கியுள்ளவர்களை சென்றடைவதற்காக அகழ்வுப் பணியந்திரங்கள் மற்றும் தேடுதல் விளக்குகளைப் பயன்படுத்துவதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு சுரங்கப் பாதைகளுக்குள் நுழைந்த பின்னர் மூன்று சடலங்களை மீட்புக் குழுக்கள் கண்டுபிடித்துள்ளன. சேற்றால் மூடப்பட்டுள்ள ஏனைய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

“பெருமளவில் குப்பைகள் மற்றும் மண் தேங்கியுள்ளமை சுரங்கங்களைத் திறப்பதற்கு பெரும் தடையாக உள்ளது. சுரங்கங்களைத் திறப்பதிலேயே எமது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது,” என நேபாள இராணுவப் பேச்சாளர் ராஜா ராம் பஸ்னெட் தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்