எதிர்வரும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் அளவில் மழைப்பொழிவு கிடைக்காவிட்டால் மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
தெரண 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
மின் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கால் குறைப்பதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், தற்போது முந்தைய நிலையை விட கட்டணம் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அதிகரித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்காலத்தில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மட்டுமன்றி, ஆரம்பமாகவுள்ள சுற்றுலாப் பருவத்தில் சுற்றுலாத் துறையும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில் கிடைத்த மழைப்பொழிவு காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மின் உற்பத்தியைப் பெற முடிந்ததாகவும், பகல் வேளைகளில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின் கட்டமைப்பை ஸ்திரப்படுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், எதிர்வரும் காலத்தில் போதிய மழைப்பொழிவு கிடைக்காவிட்டால் மின் உற்பத்திக்காக ஃபர்னஸ் எண்ணெய் மற்றும் டீசல் போன்ற அதிக செலவுடைய எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த மின் கட்டணத் திருத்தத்தின்போது நிலக்கரி தொடர்பான இழப்பில் சுமார் 10 சதவீதம் மட்டுமே கட்டணத்தில் உள்ளடக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் அந்த இழப்பை வரிப்பணத்தின் மூலமாகவோ அல்லது மின் நுகர்வோரிடமிருந்தோ மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
புதிய நிலக்கரி கையிருப்பு கிடைத்து, அதனைப் பயன்படுத்தி மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் வரை இந்த நிலைமையிலிருந்து முழுமையாக விடுபடுவது கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலத்தில் போதிய மழைப்பொழிவு கிடைக்காவிட்டால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அபாயம் இருப்பதாக டி.வி. சானக்க மேலும் வலியுறுத்தினார்.




