13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பிங்கிரிய, ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்த அவரது தாய் கடந்த மாதம் 01ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
தாய் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில் சிறுமி தனது பாட்டி, சிறிய தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சந்தேகநபரான இளைஞரும் அதே வீட்டில் அவர்களுடன் வசித்து வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டில் வேறு யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். இதையடுத்து தாய் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுமி மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




