பேஸ்புக் உள்ளிட்ட பிரபல சமூக வலைத்தளங்களில் விசேட குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசக் காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்காக விற்பனை செய்யும் இணையவழி கடத்தல் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அமைச்சு முழுமையான கவனம் செலுத்தியுள்ளதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், மேலதிக விசாரணைகளுக்காக இந்த விவகாரம் இலங்கை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போலியான சமூக வலைத்தளக் கணக்குகளைப் பயன்படுத்தி, தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையே இக்குழுக்களில் விற்பனை செய்ய முயற்சிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோதக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிற்குள்ளேயே இவ்வாறான பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக வலைத்தளப் பயன்பாடு மற்றும் அவர்களின் நண்பர்கள் தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குடும்பத்தில் எவரேனும் இவ்வாறான இணையவழி கடத்தலால் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது அதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், அவர்களுக்கு உடனடியாக உளவியல் மற்றும் சமூக ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் இருந்து பாதுகாப்பைப் பெறவும் சட்ட உதவியைப் பெற்றுக்கொள்ளவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பின்வரும் கட்டணமில்லா உதவி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது:
1938 – பெண்கள் உதவிச் சேவை
1929 – சிறுவர் உதவிச் சேவை
மேலும், இந்த ஆபத்தான நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் பலர் இணையத்தில் விழிப்புணர்வுப் பதிவுகள் மற்றும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர்.




