அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் இதுவரை 46,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், நெல் ஆலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் தலையீட்டுடன் நெல் கொள்முதல் நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாலா பருவத்திற்கான நெல் கொள்முதல் நடவடிக்கை கடந்த ஜூலை 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய, அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படும் பகுதிகளை அண்மித்த இடங்களில் நெல் களஞ்சியசாலைகளை திறந்து கொள்முதல் நடவடிக்கையை ஆரம்பிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்தது.
இதற்கு முன்னர், இம்முறை நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 39,500 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
எனினும், எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட அதிகளவில் நெல் கொள்முதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.




