முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

ஆசிரியர்களுக்கு கட்டாய பதிவு மற்றும் தொழில் உரிமம்

ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை நிபுணர்களை கட்டாயப் பதிவு, தொழில்முறை உரிமம் வழங்குதல் மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய முறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ஆசிரியர்களுக்கு கட்டாய பதிவு மற்றும் தொழில் உரிமம்

ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை நிபுணர்களை கட்டாயப் பதிவு, தொழில்முறை உரிமம் வழங்குதல் மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய முறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, Sunday Observer பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில், கல்விச் சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியைத் தொடர்ந்து சட்டவரைஞருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டமூலம் தயாரிக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“முன்மொழியப்பட்ட கல்விச் சபை தற்போது சட்டமூலம் தயாரிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ள செயலாளர், இந்த நிறுவனத்தை “முடிந்தவரை விரைவாக” நிறுவ அரசாங்கம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொதுக் கல்வித்துறையின் தரநிலைகள் மற்றும் தரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இந்த சபையை நிறுவுவதற்கான முன்மொழிவை முன்வைத்துள்ளார்.

முன்மொழியப்பட்ட கல்விச் சபையின் கீழ் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரிய கல்வியியலாளர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் ஆகியோர் ஒழுங்குபடுத்தப்பட உள்ளனர்.

தரநிலைப்படுத்தல், பதிவு செய்தல், தொழில்முறை உரிமம் வழங்குதல், தர உத்தரவாதம் மற்றும் அங்கீகாரம் வழங்குதல் ஆகியவை சபையின் முக்கிய பணிகளில் அடங்கும்.

மேலும், ஆசிரியர்களின் தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தொழில்முறை மதிப்பீட்டு தரவரிசை முறையொன்றையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முழு கல்வித்துறையிலும் உயர் தரநிலைகளை பேணுவதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த புதிய கட்டமைப்பு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்