ஆரஞ்சு ஜூஸ் வழங்கும் இயந்திரத்தில் இருந்த ஸ்ட்ராவை எடுத்து நக்கிவிட்டு மீண்டும் விநியோகப் பெட்டியில் வைத்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதித்துள்ளது.
19 வயதான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மேக்சிமிலியன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் கல்வி கற்று வரும் மேக்சிமிலியன், “நகரம் பாதுகாப்பாக இல்லை” என்ற வாசகத்துடன் ஸ்ட்ராவை எடுத்து வாயில் வைக்கும் காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, விற்பனை இயந்திரத்தை இயக்கும் ஐஜூஸ் நிறுவனம், சம்பவத்திற்குப் பிறகு இயந்திரத்தில் இருந்த அனைத்து 500 ஸ்ட்ராக்களும் மாற்றப்பட்டதாக தெரிவித்தது.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்றங்களுக்கு அதிகபட்சமாக 2,000 சிங்கப்பூர் டாலர் அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கில், மாணவர் தரப்பும் அரசு தரப்பும் அபராதம் விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தன. தனது செயலால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து மாணவர் வருத்தம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.




