பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடமிட்டும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இவ்வகை மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாகவும், அவற்றுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து இவ்வாறான மோசடிகளுக்கு இலக்காகி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசடிக்காரர்கள் WhatsApp, Telegram உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை போலியாக உருவாக்கி, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி தங்களை பொலிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி பொதுமக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உங்கள் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது", "உங்கள் வங்கிக் கணக்கு பணம் தூய்மையாக்கலில் பயன்படுத்தப்பட்டுள்ளது", "உங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்" போன்ற அச்சுறுத்தல்களை முன்வைத்து, பின்னர் OTP இலக்கங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், "Verification", "Freeze செய்யப்பட்ட கணக்கை மீளச் செயல்படுத்துதல்" போன்ற காரணங்களைக் கூறி பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றுமாறும் அல்லது USDT போன்ற கிரிப்டோ நாணயங்களை வாங்கி அனுப்புமாறும் வற்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி, WhatsApp அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக தேசிய அடையாள அட்டை எண், வங்கிக் கணக்கு விபரங்கள், அட்டை எண்கள், CVV, கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கேட்காது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோன்று, இலங்கை பொலிஸ், குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID) மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவை தனிப்பட்ட WhatsApp எண்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவோ அல்லது வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்துமாறு கோரவோ மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் இலச்சினைகள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் கையொப்பங்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பப்படும் ஆவணங்கள் பெரும்பாலும் போலியானவையாக இருக்கக்கூடும் என்பதால், சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைய இணைப்புகள் (Links), QR குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் எந்தவொரு விசாரணைக்காகவும் பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடுவதில்லை என்றும், இவ்வாறான மோசடிகள் தொடர்பான தகவல்களை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் 071 8592918, 071 8591765 அல்லது 011 2300756 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.




