எந்தவொரு பொருளையும் இலங்கைக்கு இறக்குமதி செய்யாமல், ரூ.24.8 பில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கொட்டிகாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையான காலப்பகுதியில் போலியாக உருவாக்கப்பட்ட ஆறு வர்த்தக நிறுவனங்களை (shell companies) பயன்படுத்தி, Telegraphic Transfer (TT) முறையின் ஊடாக இந்தப் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இந்தப் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எந்தவொரு பொருளும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தப் பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கொட்டிகாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.




