இந்திய இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ‘கரப்பான் பூச்சி இயக்கத்தின்’ (Cockroach Movement) ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று (20) புதுடெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் அரசாங்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய மக்கள் சவாலாக இந்த இயக்கம் கருதப்படுகிறது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த இயக்கம் மில்லியன் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த மே மாதம் 2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை பாதித்த தேசிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைத் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ‘கொக்ரோச் மக்கள் கட்சி’ (CJP) இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமான நாளில், டெல்லி ஜந்தர் மந்தரில் பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த கலவர தடுப்பு பொலிஸாரும் துணை இராணுவப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




