வரி செலுத்த வேண்டிய கடமை இருந்தும் அதனை திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் மற்றும் வரி அறிக்கைகளை சமர்ப்பிக்காத வணிக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஜூன் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ், உரிய காலத்திற்குள் சட்டத்திற்கு இணங்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்யத் தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை குற்றங்களாக கருதப்படும்.
இணக்கமற்ற வரி செலுத்துபவர்களுக்கு முதலில் உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் குறைபாடுகளை சரிசெய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த காலப்பகுதிக்குள் இணங்கத் தவறினால், நீதவான் நீதிமன்ற விசாரணையின் பின்னர் குற்றவாளிகளுக்கு 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த சட்ட நடவடிக்கைகள் வரி ஏய்ப்பாளர்களை இலக்காகக் கொண்டவை என்றும், முறையாக வரி செலுத்தும் குடிமக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.




