முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
தொழில்நுட்பம்

AI கணக்குகள், Deepfake காணொளிகளால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்

Facebook சமூக ஊடகத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான கணக்குகள் (Synthetic Personas) மற்றும் அரசியல் Deepfake காணொளிகள் மூலம் இலங்கையின் ஜனநாயகத்திற்கும் தேர்தல்களின் நியாயத்தன்மைக்கும் கடுமையான…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
AI கணக்குகள், Deepfake காணொளிகளால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்

Facebook சமூக ஊடகத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான கணக்குகள் (Synthetic Personas) மற்றும் அரசியல் Deepfake காணொளிகள் மூலம் இலங்கையின் ஜனநாயகத்திற்கும் தேர்தல்களின் நியாயத்தன்மைக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கையொன்று எச்சரித்துள்ளது.

சுயாதீன ஆய்வாளரான கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவவினால் தயாரிக்கப்பட்ட “From Bedrooms to Parliament: AI Women, Political Deepfakes, and Facebook’s Growing Failures” என்ற அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரினி அமரசூரியவைப் போன்று உருவாக்கப்பட்ட 10 AI காணொளிகள் தொடர்பில் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. அவற்றின் மொத்த பார்வைகள் 1.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஒருபோதும் தெரிவிக்காத கருத்துகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட ஒரு போலியான காணொளி மாத்திரம் 324,000க்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டுள்ளது. கொசுக்களை ஓரினச்சேர்க்கையாளர்களாக மாற்றுவதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் கூறுவது போன்ற வகையில் அந்தக் காணொளி போலியாக உருவாக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஆரம்பத்தில் வயது வந்தோருக்கான உரையாடல்கள் (Adult Chat), சூதாட்டம், கிரிப்டோகரன்சி மற்றும் ஏனைய நிதிசார் தளங்களுக்கு பயனர்களை வழிநடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த போலியான பெண் கணக்குகள் தற்போது அரசியல் உள்ளடக்கங்களைப் பரப்புவதற்கும் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன.

குறித்த காணொளிகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட AI மென்பொருளின் நீர்க்குறி (Watermark) தெளிவாகத் தெரிந்த போதிலும், அவை AI மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை Facebook அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடும் எந்தவொரு அடையாளத்தையும் அந்தக் காணொளிப் பக்கங்களில் வெளியிடவில்லை எனவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அந்தக் காணொளிகளின் கீழ் பிரதமருக்கு எதிரான பாலின அடிப்படையிலான அவதூறான கருத்துகளும் பதிவிடப்பட்டிருந்ததுடன், சில பயனர்கள் அந்தப் போலியான கருத்துகளை உண்மையானவை என நம்பியுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தப் போலியான பெண் கணக்குகள் மூலம் உருவாக்கப்பட்ட வலையமைப்பு அரசியல் செல்வாக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என கலாநிதி ஹத்தொட்டுவ எச்சரித்துள்ளார்.

மேலும், எதிர்கால ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மட்டுமன்றி, தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும் அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் ஆட்சி நிர்வாகத்திலும் இத்தகைய செயற்கையான ஊடக உள்ளடக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அறிக்கையின் நிறைவேற்றுச் சுருக்கம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரியவின் கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளது. செப்டெம்பர் 7ஆம் திகதியிட்ட கடிதமொன்றின் மூலம் கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கையை அனுப்பியுள்ளதுடன், Facebook இன் தாய் நிறுவனமான Meta நிறுவனத்திடமிருந்து பொறுப்பான பதிலைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரியுள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் உருவாக்கப்படும் இத்தகைய மோசடியான AI உள்ளடக்கங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு உரிய அடையாளமிடல் (Labelling) செய்வது, பாலின அடிப்படையிலான அவதூறுகளுக்கு தீர்வு காண்பது மற்றும் இலங்கையின் சமூக ஊடகப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் அவசர மீளாய்வு மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், AI கணக்குகள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும், அரசாங்கத்தின் சார்பில் செயற்பட்டு அரசியல் எதிரிகளைத் தாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கையான அரசியல் உள்ளடக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்த Meta நிறுவனம், இலங்கை அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுயாதீன ஆய்வாளர்கள் இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் எனவும் கலாநிதி ஹத்தொட்டுவ வலியுறுத்தியுள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்