2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,760 ஆகும். தென் மாகாணத்தில் 13,931 பேரும், மத்திய மாகாணத்தில் 8,788 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,910 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியாக அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,444 ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் 19,008 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,043 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,154 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,181 பேரும் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர்.
மேலும், நாடளாவிய ரீதியில் 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.




