ரயில்வே திணைக்களத்திடம் தற்போது 50 ரயில் என்ஜின்கள் மட்டுமே இயக்கக்கூடிய நிலையில் இருப்பதாக திணைக்கள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் ரயில் என்ஜின் கையிருப்பில் 98 என்ஜின்கள் காணப்பட்ட போதிலும், தற்போது சுமார் 50 என்ஜின்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் சேவைகளை வழமையான முறையில் முன்னெடுப்பதற்கு 74 என்ஜின்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் திணைக்களத்திடம் 53 இயக்கக்கூடிய ரயில் என்ஜின்கள் இருந்ததாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதனிடையே, பெரும்பாலும் அலுவலக ரயில் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் டீசல் பல அலகுத் தொடருந்துகள் (Power Sets) தற்போது 118 மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 242 பல அலகுத் தொடருந்துகள் காணப்பட்டாலும், வழமையான சேவைகளை முன்னெடுக்க 193 தேவைப்படுகின்றன.
2024ஆம் ஆண்டில் கையிருப்பில் 258 பல அலகுத் தொடருந்துகள் இருந்ததுடன், அவற்றில் 148 சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
ரயில் என்ஜின்கள் மற்றும் பல அலகுத் தொடருந்துகளின் பற்றாக்குறை காரணமாக தினசரி பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படுவதாகவும், சில என்ஜின்கள் மற்றும் பல அலகுத் தொடருந்துகளில் காணப்படும் கோளாறுகள் காரணமாக ரயில் தாமதங்களும் அதிகரித்துள்ளதாகவும் ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே திணைக்களத்தில் நிலவும் இந்த நிலைமை தொடர்பில் பல தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக ரயில்வே பொது முகாமையாளருக்கு அறிவித்த போதிலும், அவர் இது தொடர்பில் சாதகமான பதிலை வழங்கவில்லை எனவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்நிலையில், தொடர்ச்சியாக நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு ரயில்வே பொது முகாமையாளரின் அமைதியான அணுகுமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 17ஆம் திகதி 27 ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தத்திற்கு தமது சங்கமும் ஆதரவளிக்கும் என இலங்கை பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காவலர் உறுப்பினர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமது உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை ஒன்றைக் கோரிய போதிலும், இதுவரை ரயில்வே பொது முகாமையாளர் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என அந்த ஒன்றியத்தின் செயலாளர் அனில் குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்தில் தமது சங்கமும் இணையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (14) நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து அமைச்சில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




