நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த நீரின் கொள்ளளவு சுமார் 47.3 சதவீதமாக இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவற்றில், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் பிரதான நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 34.4 சதவீதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 20 சதவீதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது யால பருவத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், தற்போதுள்ள நீரின் அளவு இப்பருவத்திற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இருப்பதாக அவர் கூறினார்.
அத்துடன், இந்த நீர்த்தேக்கங்களை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பகுதிகளுக்கும் எதிர்வரும் மழைவீழ்ச்சி கிடைக்கும் வரை தற்போதுள்ள நீரின் அளவு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து ஆவியாகும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் பெரும் போகத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பெரும் போகத்தை ஆரம்பிக்கும் போது காணப்படும் நீரின் அளவை அடிப்படையாகக் கொண்டு பருவக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக, பெரும் போகத்தை முடிந்தவரை விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




