நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சுமார் 45 சதவீத நீர் சேமிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் மற்றும் நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.பி.எச்.எஸ்.டி. ஹேரத் தெரிவிக்கையில், திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவு தற்போது சுமார் 33 சதவீதமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் தற்போது சுமார் 20 சதவீத நீர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தற்போது யாலா பருவத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான அளவு நீர் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் பெறும் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், எதிர்வரும் மஹா பருவத்தின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அம்பாறை மாவட்டத்தில் மஹா பருவ பயிர்ச்செய்கையை நாளை (15) ஆரம்பிப்பதற்கு முன்னர் நடைபெற்ற பருவகாலக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனுடன், ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களில் மஹா பருவ பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பது தொடர்பில் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு மற்றும் மழைப்பொழிவு தொடர்பான முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும், பல நீர்ப்பாசனத் திட்டங்களில் பயிர்ச்செய்கையை நாளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




