உள்நாட்டு சந்தையில் பொதியிடப்படாத தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அரச நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE) உபகுழுவொன்றின் முன்னிலையில் ஆஜராகியபோது, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் காணப்படும் தரம் குறைந்த தேங்காய் எண்ணெயில் வேறு வகையான எண்ணெய்கள் கலப்படம் செய்யப்படுவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய தேவைகளின் கீழ், தேங்காய் எண்ணெய் பொதிகளில் உற்பத்தியின் பெயர், நிறை, காலாவதித் திகதி, தொகுதி இலக்கம் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களைக் கொண்ட பெயர்ப்பலகை இடம்பெற வேண்டும்.
உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தேவையான தரநிலைகளைப் பேணுவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை இலங்கை தரநிர்ணய நிறுவகத்துடனும் (SLSI) இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




