நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தை கருத்திற்கொண்டு, யால தேசிய பூங்காவின் வலய இலக்கங்கள் 01 மற்றும் 02 எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளன.
இன்று (07) நடைபெற்ற ‘BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) மஞ்சுல மரரத்ன, நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக விலங்குகளுக்கு நீர்ப்பற்றாக்குறையுடன் வெப்ப அழுத்தமும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், அதிகளவிலான சுற்றுலா ஜீப் வாகனங்கள் பூங்காவிற்குள் பயணிப்பதால், தற்போதைய சூழ்நிலையில் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தமது கடமைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வறண்ட வலயத்திற்கு உட்பட்ட யால தேசிய பூங்காவின் 01 மற்றும் 02ஆம் வலயங்கள், மன்னார் மற்றும் வில்பத்து தேசிய பூங்காவைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் நிலைமை தொடர்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக மஞ்சுல மரரத்ன தெரிவித்தார்.
தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த தேசிய பூங்காக்களை மூடுவதற்கு அல்லது விலங்குகளும் அதிகாரிகளும் வெப்ப அழுத்தமின்றி செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




