அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Tulsa போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்காக இன்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இரண்டு வருடங்களுக்குள் குறித்த போர்க்கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறையாகும்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாவது, ‘Independence-variant’ வகையைச் சேர்ந்த இந்த போர்க்கப்பல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக புறப்படுவதற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் மற்றும் தேவையான விநியோகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.
‘USS Tulsa’ போர்க்கப்பல் இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்திருந்தது.
இந்த விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர், அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் இத்தகைய விஜயங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவுவதாக தெரிவித்தார்.
இத்தகைய விஜயங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், கடல் பரப்பில் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல் மற்றும் கூட்டாளர் நாடுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்காக USS Tulsa போர்க்கப்பல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.




