தொடர்ச்சியாக, உயர் தரத்திலும் குறைந்த அலகு விலையிலும் மின்சாரத்தை வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட மின்சார உற்பத்திக் கொள்கை நாட்டுக்கு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அடைந்துகொள்ள முடியும் எனவும், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் பல்வேறு கோஷங்களை முன்வைத்த தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தத் திட்டங்களை கைவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூரிய சக்தி தொழில்முனைவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்கள் தொடர்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth அவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டில் சூரிய சக்தித் துறையின் ஊடாக ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர் உருவாகியதாகவும், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சுயதொழில் புரிவோர் மற்றும் தொழில்முனைவோர் என பெருமளவானோர் இந்தத் துறையுடன் இணைந்ததாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது சூரிய சக்தியை அடிப்படையாகக் கொண்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் படிப்படியாக அழிவடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு அரசியல் அல்லது செல்வாக்கு மிக்க தொடர்புகள் இல்லாத காரணத்தால், அவர்களின் தொழில்முனைவுத் திறனை பாதிக்கும் வகையிலான அரச கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சூரிய சக்தி தொழில்முனைவோர் மாதாந்தம் 25 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை நாட்டுக்கு சேமித்துக்கொடுத்து, சுமார் 2,500 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், வீடுகளின் கூரைகளில் 10 இலட்சம் சூரிய சக்தி முறைமைகளை நிறுவும் இலக்கை நோக்கி நாட்டினால் ஏன் செல்ல முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது சுமார் 150,000 கூரைமீது பொருத்தப்பட்ட சூரிய சக்தி முறைமைகள் காணப்படுவதாகவும், சூரிய சக்தி, நீர் மற்றும் காற்றாலை சக்தி போன்ற இயற்கை வளங்கள் நாட்டில் காணப்படும் நிலையில், அனல் மின் நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளுக்காக பெருமளவு பணம் செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சூரிய சக்தி அலகொன்றுக்காக வழங்கப்பட்டு வந்த 37 ரூபாய் 27 ரூபாயாகவும், பின்னர் 20 ரூபாய்க்கும் குறைவான மட்டத்திற்கும் குறைக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நெட் பிளஸ் முறையின் ஊடாக சூரிய சக்தி தொழில்முனைவோர் தமது முதலீடுகளில் இருந்து விலகும் நிலை உருவாக்கப்படுவது, அனல் மற்றும் எரிபொருள் மின் நிலையத் துறையின் நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் பின்பற்றுவதன் காரணமாகவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே போன்ற நாடுகளின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான அனுபவங்களிலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், நாட்டில் புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய சக்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணைகளைச் சுற்றியுள்ள யுத்த நிலைமைகளுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் அனல் மின் நிலையங்களில் அதிகளவில் தங்கியிருப்பது நாட்டின் தற்போதைய நிலைக்கும் எதிர்காலத்திற்கும் பாதகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தொடர்ச்சியாக குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய சக்தியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகபட்ச ஆதரவை வழங்கும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.




