நிர்ணயிக்கப்பட்ட நிறையைவிட குறைந்த நிறையுடைய பாணை விற்பனை செய்தல் மற்றும் பாணின் நிறை மற்றும் விலையை முறையாகக் காட்சிப்படுத்தாமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 29ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின்போது 107 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, குறைந்த நிறையுடைய பாண் விற்பனை தொடர்பில் 35 சம்பவங்களும், பாணின் நிறையை காட்சிப்படுத்தாத 85 இடங்களும், பாணின் விலையை காட்சிப்படுத்தாத 55 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்போது 71 பேக்கரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறைந்த நிறையுடைய பாண் கண்டுபிடிக்கப்படும் சந்தர்ப்பங்களில், சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமன்றி, அந்தப் பாணை உற்பத்தி செய்த பேக்கரி வரையிலும் விசாரணைகளை விரிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்போது பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பாணின் நிறையும் பரிசோதிக்கப்படுவதுடன், தவறு உறுதிப்படுத்தப்பட்டால் உற்பத்தி செயன்முறையை உடனடியாகச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தப்படும் எனவும், போதுமான ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களில் நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 118 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டு, குறைந்த நிறையுடைய பாண் தொடர்பான 54 சம்பவங்கள் கண்டறியப்பட்டிருந்தன.
அதன்படி, இரண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலும் மொத்தமாக 225 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த நிறையுடைய பாண் தொடர்பான 89 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.




