முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

வெளிநாட்டு செலாவணி விதிமுறைகளுக்கு அனுமதி

2026ஆம் ஆண்டு 01 மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி விதிமுறைகளுக்கும், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைக்கும் அரசாங்க நிதி தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளது.…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
வெளிநாட்டு செலாவணி விதிமுறைகளுக்கு அனுமதி

2026ஆம் ஆண்டு 01 மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி விதிமுறைகளுக்கும், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைக்கும் அரசாங்க நிதி தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டதன் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கையர்களின் வெளிநாட்டு முதலீடுகள்

2026ஆம் ஆண்டு 01ஆம் இலக்க விதிமுறையின் கீழ், இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகள், அதற்குத் தகுதியான துறைகள், மூலதனத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான வரம்புகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான நிதி வசதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

புலம்பெயர்ந்தோரின் சொத்துப் பணப்பரிமாற்றம்

2026ஆம் ஆண்டு 02ஆம் இலக்க விதிமுறையின் கீழ், புலம்பெயர்ந்தோர் இலங்கையில் வைத்துள்ள சொத்துக்கள் மற்றும் மூலதனத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கான நடைமுறைகள், அத்துடன் வாடகை வருமானம், வட்டி மற்றும் பங்காதாயம் போன்ற நடப்பு வருமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

வெளிநாட்டு செலாவணி வெளியேற்றக் கட்டுப்பாடுகள்

வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் குறித்து மத்திய வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர். பொருளாதார நிலைமை மேம்படும்போது இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான வெளிநாட்டு முதலீட்டு வரம்பு விதிமுறைகளில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கட்டளை மூலம் அது 0.75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டமை தொடர்பில் குழுத் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய வங்கி அதிகாரிகள், 0.75 மில்லியன் அமெரிக்க டொலர் வரம்பு ஆறு மாத காலத்திற்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றும், 2027ஆம் ஆண்டில் அதனைத் தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கான இந்த வரம்பு 0.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இந்த வரம்புகளுக்கு உட்பட்ட முதலீடுகளுக்கு நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு மத்திய வங்கி பணிப்பாளர் சபையின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் மேலும் விளக்கினர். இதனால் அதிக சொத்துக்களைக் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு அதிக நன்மை கிடைக்கக்கூடும் எனவும் கலந்துரையாடலில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

வெளிநாட்டு செலாவணி சட்டவிரோதமான முறையில் வெளியேறுவதைத் தடுப்பதற்காக வங்கிகள் மற்றும் சுங்கத் தரவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அதிகளவில் சட்ட விதிமுறைகளை கடுமையாக்குவதும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதும் உள்நாட்டு தொழில் முனைவோரை ஊக்கமிழக்கச் செய்யக்கூடும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். வெளிநாடுகளுக்கான செலாவணி வெளியேற்றத்தை கடுமையாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு செலாவணியின் அளவும் குறையக்கூடும் என குழுத் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்