சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாத இறுதியில் இலங்கையின் எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் கணக்கிடப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, தற்போது இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவது உலக சந்தையில் நிலவும் விலையை விட குறைந்த மட்டத்தில் உள்ளது. இந்த நிலைமையில் தொடர்ந்து செயற்பட முடியாது என தனியார் விநியோகஸ்தர்கள் அவ்வப்போது எச்சரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிலவும் நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் பல்வேறு மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலக சந்தை விலை அதிகரிப்பால் நுகர்வோர் எதிர்கொள்ளும் அழுத்தத்தை குறைப்பதற்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரசாங்கம் தலையிட்டு நிவாரணம் வழங்கியதைப் போன்று மீண்டும் நிவாரணம் வழங்குவது ஒரு மாற்று வழியாகும் என அவர் தெரிவித்தார்.
மற்றொரு மாற்று வழியாக, எரிபொருள் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை வரம்பை நிர்ணயித்து, அந்த விலை வரம்பிற்குள் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
“இந்த அனைத்து விடயங்களையும் பரிசீலித்து நாம் தீர்மானம் எடுப்போம். எரிபொருள் நுகர்வோரின் தேவைகளுடன் தனியார் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இங்கு கவனத்தில் கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் எரிபொருளை வழங்குவதற்கும், எரிபொருள் விநியோக முறைமையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இடையில் சமநிலையைப் பேண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உலக சந்தை போக்குகள் மற்றும் உள்நாட்டு காரணிகளை மீளாய்வு செய்த பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.




