முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளமை தொடர்பில் இன்று…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளமை தொடர்பில் இன்று (11) நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ வழங்கிய பதிலின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தை குறைப்பதற்கான அறிவுறுத்தலை உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கியதன் அடிப்படையிலேயே இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், அஸ்வெசும திட்டம் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோதே, பயனாளிகளை மீளாய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் சட்டரீதியாகவே திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

அதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது மீள்சான்றளிக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கையை செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை சுமார் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்வெசும திட்டம் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, அந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை 1,773,445 ஆக இருந்தது. 2024 டிசெம்பர் மாதத்தில் அது 1,761,116 ஆக பதிவாகியிருந்தது.

2025ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆக அதிகரித்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அது 1,251,522 ஆகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அஸ்வெசும பயனாளிகள் மிகவும் வறியோர், வறியோர், பாதிப்புக்குள்ளானோர் மற்றும் இடைநிலை என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இடைநிலைப் பிரிவுக்கான கொடுப்பனவுகள் 2025 டிசெம்பர் மாதத்திலும், பாதிப்புக்குள்ளானோர் பிரிவுக்கான கொடுப்பனவுகள் 2026 ஜூன் மாதத்திலும் நிறைவடைந்ததாக அவர் கூறினார். தற்போது மிகவும் வறியோர் மற்றும் வறியோர் ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரமே அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2025 டிசெம்பர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மிகவும் வறியோருக்கான கொடுப்பனவு 15,000 ரூபாயிலிருந்து 17,500 ரூபாயாகவும், வறியோருக்கான கொடுப்பனவு 8,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், இடைநிலைப் பிரிவுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்