உள்நாட்டில் தயாரிக்கப்படும் டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சூரை மீன் மற்றும் ஜாக் மெக்கரல் உள்ளிட்ட டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
155 கிராம் நிகர எடையும், 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடையும் கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 425 கிராம் எடையும், 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடையும் கொண்ட டின் சூரை மீனின் விலை 510 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 155 கிராம் நிகர எடையும், 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடையும் கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும், 425 கிராம் டின்னின் விலை 600 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட அதிக விலையில் குறித்த டின் மீன் வகைகளை விற்பனை செய்யவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.




