இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திலேயே புதிய சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைத்து அதன் கொள்ளளவை பாரிய அளவில் அதிகரிக்க Build-Operate-Transfer (BOT) முறையின் கீழ் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 50,000 பீப்பாய்களாக உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு கொள்ளளவை 100,000 பீப்பாய்களாக இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தனியார்மயமாக்கல் அல்லது விற்பனை நடவடிக்கை அல்ல எனவும், அரச-தனியார் கூட்டாண்மையும் அல்ல எனவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான BOT முறையிலான திட்டம் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார உறுதிப்படுத்தியுள்ளார்.
Ernst & Young நிறுவனத்தினால் சுத்திகரிப்பு நிலையத்தின் சொத்துக்கள் தொடர்பான விரிவான வர்த்தக மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அது 2026 ஒக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் முதலீட்டாளர்களிடம் கருத்து கோரப்பட்டபோது 20 சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து பதில்கள் கிடைத்துள்ளதுடன், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு குறித்த முன்மொழிவுகளை பரிசீலித்து முடித்துள்ளது.
குறுகிய பட்டியலில் இடம்பெற்றுள்ள சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்கான இறுதி கட்டமைப்பு எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர் திட்டத்திற்கான ஆரம்ப நிதியை வழங்குவதுடன், மூன்று வருட காலப்பகுதியில் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
SOREM (Sapugaskanda Oil Refinery Expansion and Modernisation) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் இலங்கையை எரிசக்தித் துறையில் தன்னிறைவு அடையச் செய்தல், நாட்டின் உள்நாட்டு எரிபொருள் தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்தல் மற்றும் இலங்கையை பிராந்திய எரிபொருள் ஏற்றுமதி மையமாக மாற்றுதல் ஆகியவை அடங்குகின்றன.
தற்போது சுமார் 60 ஆண்டுகள் பழமையான சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்படவுள்ள புதிய கட்டமைப்பிற்கான மொத்த மூலதன முதலீடு 2.766 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் நிகர தற்போதைய மதிப்பு 1.504 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 20 வருட செயற்பாட்டு காலத்தில் உள்நாட்டு வருவாய் விகிதம் 16.1 சதவீதமாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆறு வருட மூலதன மீட்புக் காலத்திற்குப் பின்னர், இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 300 முதல் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுவதுடன், 20 வருட காலத்தில் கிடைக்கும் ஒட்டுமொத்த பணப்புழக்கம் 9.12 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தற்போது ஆண்டுதோறும் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 4.23 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுகிறது. உள்நாட்டு சுத்திகரிப்பு கொள்ளளவை இரட்டிப்பாக்குவதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் பெருமளவிலான அந்நியச் செலாவணியை சேமிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.




