இலங்கையின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த மின்சார ரயில் பாதை அமைப்பின் கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இந்த ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
முதல் கட்டத்தின் கீழ் அதிக பயணிகள் தேவையைக் கொண்ட மூன்று பிரதான பயணிகள் வழித்தடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து ராகமை வரையிலான பிரதான பாதை, கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையிலான கரையோரப் பாதை மற்றும் மருதானையிலிருந்து மாகும்புர வரையிலான களனி பள்ளத்தாக்கு பாதை ஆகியவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களைப் புனரமைத்தல் மற்றும் புதிய நிலையங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட ரயில்வே உட்கட்டமைப்புகளை கணிசமாக நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய ரயில் நிலையங்கள் வெறுமனே பயணச்சீட்டு வழங்கும் பாரம்பரிய நிலையங்களாக மட்டுமன்றி, பயணிகளுக்கான நவீன வசதிகள் மற்றும் மேலதிக சேவைகளுடன் அமைக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




