கடந்த சில நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் முழுமையாக சாட்சிகளை கொலை செய்யும் நோக்கில் இடம்பெற்றவை எனத் தெரியவருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களைக் கொண்ட “அதிட்டன” சந்திப்பு களுத்துறையில் நேற்று (23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாரிய குற்றவாளிகளை கடந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தக் குற்றவாளிகள் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், வாகனங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நாடுகளுக்கு அரசியல்வாதிகள் சென்றபோது குறித்த குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணி சுகபோகங்களை அனுபவித்ததாகவும் பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
தமது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் வெற்றியின் காரணமாகவே எதிர்க்கட்சியினர் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒரு அரசியல் குழுவை மாத்திரமன்றி பல குழுக்களை அதிகாரத்திலிருந்து அகற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்று நிதி ஒழுக்கத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதாகவும், அனைத்து துறைகளிலும் உரிய முறையில் வருவாயைச் சேகரித்து பொருளாதார நிலைமையை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 15 மாதங்களில் இலங்கை பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், அதிக பொருளாதார வளர்ச்சியைப் பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.




