இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சராக அவர் மேற்கொள்ளும் முதலாவது இலங்கை விஜயம் இதுவாகும். இதன்போது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த விஜயத்தின்போது, பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பையும் வகிக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் முப்படைகளின் தளபதிகளை ராஜ்நாத் சிங் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டு இராணுவப் பயிற்சிகள், அனர்த்த நிவாரண சேவைகள் பரிமாற்றம், கடற்படை கப்பல்களின் துறைமுக விஜயங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
மேலும், மின்சாரக் கட்டமைப்புகளை இணைக்கும் திட்டம், சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டம் மற்றும் திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அமெரிக்க டொலர் 61.5 மில்லியன் மானியத்தின் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தி புனரமைக்கும் திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
அத்துடன், இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்திற்கான கேள்விப்பத்திர நடைமுறையை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




